< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டை சர்வதேச தரத்துக்கு நிகராக பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, அமைச்சர் சேகர் பாபு உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டை சர்வதேச தரத்துக்கு நிகராக பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, அமைச்சர் சேகர் பாபு உத்தரவு

தினத்தந்தி
|
5 Feb 2023 11:46 AM IST

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டை சர்வதேச தரத்துக்கு நிகராக பராமரிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட் வளாகத்தில் உள்ள பெரியார் காய்கறி சந்தையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வளாகத்தினை சர்வதேச தரத்துக்கு நிகராக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பண்டிகை காலங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுவதுபோன்று, அன்றாடம் அங்காடி வளாகத்தினை 2 முறை துப்புரவு பணி மேற்கொள்ளவும், அதற்கு ஏற்றவாறு பணியாளர்களை அதிகரித்தும் சுழற்சி முறையில் பணியாளர்களை ஈடுபடுத்தவும் அறிவுறுத்தினார். மேலும், கடைகளில் பின்புறம் அமைந்துள்ள சேவை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பினை முழுவதுமாக அகற்றுவதோடு, சேதமடைந்த பகுதிகளை சீர்செய்து, அன்றாடம் தூய்மை பணியில் கவனம் செலுத்தவும் சேகர் பாபு அறிவுறுத்தினார்.

வணிக பாதையில் ஆங்காங்கே படிந்துள்ள திடக்கழிவுகளை முழுமையாக அகற்றவும், சேதம் அடைந்த பகுதிகளை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வளாகத்திலுள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிக்கவும், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூய்மை செய்யும் பணியினை உரிய அலுவலர்கள் முறையாக கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

வணிக வளாகத்தில் உருவாகும் திடக்கழிவுகளை தரம் பிரித்து நாள் ஒன்றுக்கு 25 டன் அளவிளான கழிவுகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் இயங்கும் சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு மையத்தின் பயன்பாட்டுக்கு இப்போது எடுத்து செல்லப்படுகிறது. அதனை விரிவுபடுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு 40 டன் கழிவுகள் கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள சேகர்பாபு உத்தரவிட்டார்.

வருங்காலத்தில் இதுபோன்ற இயற்கை எரிவாயு மையங்கள் கோயம்பேட்டின் அருகிலேயே அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராயவும், கோயம்பேடு மொத்த மார்க்கெட் வளாகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வணிக நிமித்தமாக வந்து செல்வதால் இந்த வணிக வளாகத்தினை சர்வதேச தரத்துக்கு நிகராக பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச்செயலரும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் துணை தலைவருமான அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போலீஸ் இணை கமிஷனர் எம்.மனோகர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்