சென்னை
சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
|சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டமானது அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் விரிவாக்கப்பட்டு வருகிறது. நேற்று ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உருது நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான முதல்- அமைச்சர் காலை உணவு திட்டத்தின் செயல்பாட்டினை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அந்த இடத்தில் சென்னை உருது நடுநிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.96 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணியினை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், பவளக்காரத் தெருவில் ரூ.1.65 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து பணியை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதைதொடர்ந்து திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட எஸ்.எஸ்.புரம் பிரக்ளின் சாலையில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3.73 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும் அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ. தாயகம் கவி, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மண்டலக்குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.