< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜியின் உதவியாளர் ஆவணங்களை மறைக்க முயற்சி - அமலாக்கத்துறை தகவல்
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜியின் உதவியாளர் ஆவணங்களை மறைக்க முயற்சி - அமலாக்கத்துறை தகவல்

தினத்தந்தி
|
5 Aug 2023 5:14 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சாமிநாதன், சோதனையின் போது ஆவணங்களை மறைக்க முயற்சி செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கரூரில் கடந்த 3-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சாமிநாதன், சோதனையின்போது ஆவணங்களை மறைக்க முயற்சி செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆவணங்கள் இருந்த பையை சாமிநாதனின் உறவினர் சாந்தி எடுத்து சென்றதும், பின்னர் அந்த பையை ஓட்டுநர் சிவாவிடம் கொடுத்ததும் சி.சி.டி.வி. மூலம் அம்பலமாகியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

முன்னதாக சாமிநாதனின் உறவினர் சாந்தி தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஓட்டுநர் சிவா வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். சாமிநாதனின் உறவினரான சாந்தி சோதனைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றும், ஓட்டுநர் சிவா தலைமறைவாக உள்ளார் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்