அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: கிடப்பில் போடப்பட்டதா பதவி நீக்க உத்தரவு..?
|அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் கடந்த 13-ந் தேதி காலையில் அமலாக்கத்துறை தொடங்கிய சோதனை, 14-ந் தேதி விடியற்காலை 2 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு இருதய ரத்த குழாயில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கிடையே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், 15 நாட்கள் விசாரணை காவலுக்கு அழைத்து செல்லவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.
ஆனால் ஐகோர்ட்டு உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அவரை அமலாக்கத்துறையினரால் விசாரிக்க முடியவில்லை.
கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருப்பதால், அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரித்தளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும்; மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) ஆகிய இலாகாக்களை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் துறைகளாக ஒதுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.
இந்த இலாகா மாறுதல் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடந்த 16-ந் தேதி செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், இலாகா மாறுதல் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் செந்தில்பாலாஜி சில குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.
அரசு பதிலடி
அதற்கு பதிலடியாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 'செந்தில்பாலாஜி பொறுப்பில் இருந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், ஜூலை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலை, காணொலி காட்சி மூலம் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.
செந்தில் பாலாஜி 'டிஸ்மிஸ்'
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கவர்னர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், "பண பரிமாற்றம், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழங்குகளில் சிக்கி மோசமான குற்ற நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்கொள்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்துகொண்டு விசாரணைக்கும், நீதிபரிபாலனைக்கும் இடையூறு செய்கிறார்.
அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்படும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் அவர் இருக்கிறார். மேலும், மாநில போலீசின் விசாரணையில், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடரப்பட்ட சில வழக்குகளும் உள்ளன.
எனவே செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை போன்றவற்றை கடுமையாக பாதித்து, அரசியல் சாசன எந்திரத்தை செயல்படவிடாமல் செய்யும் என்ற சந்தேகம் வருவதற்கு சரியான காரணம் உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.