மின் நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
|24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (05.10.2024) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் சேவை மையமான "மின்னகத்தில்" ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இன்று (05.10.2024) சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்களை கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கி வரும் 44 மின் பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றிற்கு நான்கு பேர் வீதம் 176 நபர்களை கொண்டும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
மின்னகம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை பெறப்பட்டுள்ள 28,69,876 புகார்களில் 28,64,215 புகார்கள் (99.80%) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னகத்தில், மின் தடை குறித்து பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக சரி செய்யப்பட்டு, புகார் குறித்த உண்மை தன்மை சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் அலைபேசி மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னரே புகார்கள் முடிக்கப்படுகின்றன.
இந்த ஆய்வின்போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்துள்ளது. மின் விநியோகம் சார்ந்த குறைபாடுகளை சரிசெய்ய 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மின்னகத்தை 9498794987-ல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் K.நந்தகுமார், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.