அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது -ஐகோர்ட்டு உத்தரவு
|சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கருதுவதால், செந்தில ்பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை 2 முறை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்தநிலையில், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் புழல் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். சிகிச்சை முடிந்து பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் வேண்டும்
இதையடுத்து, ''தன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அரைமணி நேரத்துக்கு மேல் உட்காரவோ, நிற்கவோ முடியவில்லை. உடல் நலம் கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கலைக்கும் வாய்ப்பு
செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும்போது, ஜாமீனில் விடுவித்தால் மட்டுமே அவருக்கு மருத்துவ சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை இருப்பதாக தெரியவில்லை.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கடந்த கால நடவடிக்கைகள், தற்போது வரை அவர் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடித்து வருவது, அவருடைய சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது, சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது ஆகியவற்றை பார்க்கும்போது தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கினால் அவர் இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலைக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று தெரிகிறது.
தள்ளுபடி
அதிகார பலமிக்க செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கை நியாயமானதுதான். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.