அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
|அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஏற்கனவே அமலாக்கத்துறை தாக்கல் செய்து விட்டது. இந்த வழக்கில் 2 முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.
இந்தநிலையில், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் குன்றியுள்ளது. கால்கள் மரத்துப்போனதாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறியதால், நேற்று முன்தினம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த ஜாமீன் கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு செந்தில் பாலாஜியின் தரப்பில் மூத்த வக்கீல் இளங்கோ கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் 9 மருத்துவர்களின் அறிக்கை அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.