< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் புதிய மின் இழுவை ரெயில் - அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் புதிய மின் இழுவை ரெயில் - அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
24 Jan 2024 10:29 AM IST

72 பேர் செல்லக்கூடிய இந்த புதிய மின் இழுவை ரெயிலில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மலை மீது உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், ரோப் கார் மற்றும் மின் இழுவை ரெயில் மூலமாகவும் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதில் ஒரு மின் இழுவை ரெயிலுக்கு 36 நபர்கள் செல்லும் வகையில் மொத்தம் 3 ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும், பழனி கோவில் அறங்காவலர் குழுத் தலைவருமான சந்திரமோகன், 3-வது மின் இழுவை ரெயிலை அகற்றிவிட்டு, சுமார் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மின் இழுவை ரெயிலை நன்கொடையாக வழங்கினார். 72 பேர் செல்லக்கூடிய இந்த புதிய மின் இழுவை ரெயிலில், குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

இதனிடையே புதிய மின் இழுவை ரெயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து கோளாறு சரி செய்யப்பட்டு ஐ.ஐ.டி. குழுவினரால் ஆய்வு செய்து தர சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், மின் இழுவை ரெயிலை பக்தர்களின் பயன்பாட்டிற்காக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்