< Back
மாநில செய்திகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் உயர்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் உயர்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்

தினத்தந்தி
|
27 Dec 2023 11:35 PM IST

பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை வழங்கினார்.

சென்னை,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பிற அலுவலகங்களின் அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தை இன்று (27.12.2023) தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற கூட்ட அரங்கில் நடத்தி உயர்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் அ. இராமசாமி வரவேற்புரையாற்றினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்த உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் துறைவாரியான செயல்பாடுகள் குறித்து விரிவாக அமைச்சருக்கு எடுத்துரைத்தார். பின்னர் பல்கலைக்கழகப் பதிவாளர்கள் தங்களது பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து விவரித்து, தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.

உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தனது தலைமையுரையில், மாணவர்களின் நலனை மேம்படுத்த அரசு கொண்டு வந்துள்ள சிறப்புத் திட்டங்களான முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணச் சலுகைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், பொறியியல் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் கட்டணச் சலுகைத் திட்டம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவித் திட்டம் போன்ற திட்டங்களைத் திறம்பட செயல்படுத்திடுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தைத் திறம்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்திற்கு மேம்பட வேண்டுமென்றும், பலவகைத் தொழில்நுட்பக்கல்வி உட்பட அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் செய்திகள்