< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்களில் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்களில் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

தினத்தந்தி
|
29 July 2023 8:13 AM GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் நடைபெற்ற மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்களில் கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆர்.கே.பேட்டை,

திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் பல இடங்களில் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து பள்ளிப்பட்டு தாலுகா, ஆர்.கே.பேட்டை அருகே சந்தான வேணுகோபாலபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

அப்போது சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அவரை சூழ்ந்து கொண்டு சமத்துவபுரம் பகுதியில் தங்கள் வீடுகளுக்கு மறுசீரமைப்பு செய்து கொண்டால் அதற்கான தொகை அரசு வழங்கும் என்று கூறியதின் பேரில் தாங்கள் அனைவரும் கடனை வாங்கி வீடுகளை சீரமைத்தோம். அதற்கான தொகை ரூ.12 லட்சம் 40 பேருக்கு வர வேண்டிய நிலையில் அதற்கான முன்னெடுப்பு பணிகளை செய்யாமல் ஊராட்சி மன்ற தலைவர் தங்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

அந்த நேரத்தில் அருகில் நின்ற மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதைக் கேட்டு அமைச்சர் பதில் சொல்வதற்குள் பக்கத்தில் இருந்த அவர்களை சமாதானம் செய்து உங்களுக்கு விரைவாக பணம் வருவதற்கான ஆவண செய்கிறோம் என கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைபோல ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரேஷன் கடையில் பெயர்கள் பதிவு செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மகளிர் சுய உதவி குழு அலுவலகம், திருத்தணி ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.காந்தி அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து அலுவலர்களிடம் விண்ணப்பங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்ய அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்