திருவள்ளூர்
ரூ.2¼ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
|ஆர்.கே.பேட்டையில் ரூ.2¼ கோடியில் தார் சாலை அமைக்கும் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரவிலாசபுரம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சித்தூர்- திருத்தணி சாலை முதல் சந்திர விலாசபுரம் கிராமம் வரை ரூ.2.22 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்தணி ஒன்றியம் மத்தூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து காணப்பட்டது. சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்த அகற்றி விட்டு புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இத்தனையடுத்து சேதமடைந்த மத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.