சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
|அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரம் வரும் 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிசம்பர் 19) தீர்ப்பு வழங்கினார். அப்போது அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்துக்குவித்தது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அதிரடியாக தெரிவித்தார். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தார்.
மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, அன்றைய தினம் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.