< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கை வேறு நீதிபதிகளுக்கு மாற்ற முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கை வேறு நீதிபதிகளுக்கு மாற்ற முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
15 Sept 2023 5:02 AM IST

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வேறு நீதிபதிகளுக்கு மாற்ற முடியாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை,

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் வேலூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

ஆனால், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக்கூடாது. வேறு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். சொத்துகுவிப்பு வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவு சரியில்லை என்று கூறுவதால், ஐகோர்ட்டு பதிவுத்துறையையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பிலும், பொன்முடி தரப்பிலும் வாதிடப்பட்டது.

உரிமை பறிப்பு

இந்த நிலையில், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

பொன்முடி, விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் உள்ள நிலையில், இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால், மேல்முறையீடு செய்யும் தங்களது உரிமை தடுக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றவியல் விசாரணை முறை சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, இந்த ஐகோர்ட்டு செயல்பட்டுள்ளது. இதனால், போலீசாரின் மேல்முறையீடு செய்யும் உரிமை எதுவும் பறிக்கப்படவில்லை.

எதற்கு மெழுகுவர்த்தி?

மேலும், தாமாக முன்வந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் முடிவு ஒருவேளை கீழ் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அமைந்தால், அது போலீசாருக்கு சாதகமானது தானே? ஆனால், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கோரிக்கை வியப்பாக உள்ளது.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவை குற்றம்சாட்டுவதால், ஐகோர்ட்டு பதிவுத்துறையை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஐகோர்ட்டுக்கு வலிமை இருக்கும்போது, ஐகோர்ட்டின் நிர்வாக தரப்புக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசாரும், பொன்முடி தரப்பும் எதற்காக மெழுகுவர்த்தி ஏந்தி வெளிச்சம் காட்ட வேண்டும்.

ஒரே பாதையில்...

ஒரு குற்ற வழக்கில், போலீசாரும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது. ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தோளில் அமர்ந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் துப்பாக்கியால் சுடுவது போல, ஒரே கோரிக்கையை முன்வைப்பது மர்மமாக உள்ளது. எனவே, இவர்களது கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறேன்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது அரசுக்கும், பொன்முடிக்கும், ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கும் எதிராக கருத்து தெரிவித்துள்ளதால், இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறேன்.

தூய்மை

அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகளின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதால், கடந்த சில நாட்களாக ஒரு தரப்பினர் எதிரான எண்ணத்தில் உள்ளனர், ஆனால், விசாரணைக்கு எடுத்தது ஒரு நீதிபதி அல்ல. ஐகோர்ட்டு என்ற அமைப்பு என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

குற்றவியல் வழக்கு விசாரணை என்பது தூய்மையாக, கறைபடியாதவாறு இருக்க வேண்டும். அதுபோல, இந்த ஐகோர்ட்டு உத்தரவு, தனிப்பட்ட நீதிபதிகளுக்கு எதிராகவும் இல்லை.

நிராகரிப்பு

எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார், பொன்முடி ஆகியோர் தரப்பினர் விடுத்த கோரிக்கை அனைத்தையும் நிராகரிக்கிறேன்.

இந்த வழக்கில் பதில் அளிக்க எதிர்தரப்புகளுக்கு அவகாசம் தேவைப்படும். அதேநேரம், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார். அப்போது, எம்.பி.., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்