வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இறுதி மரியாதை
|ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இறுதி மரியாதை செலுத்தினார்.
அவனியாபுரம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் லட்சுமணன் (வயது 22). ராணுவவீரரான இவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்தனர். அப்போது இரு தரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பயங்கரவாத தாக்குதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை அவர்களது சொந்த தோட்டத்தில் ராணுவ வீரர் லட்சுமணின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர்களின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.