சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்துங்கள் - அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
|சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வால்டாக்ஸ் சாலையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். சென்டிரல் முதல் யானைக்கவுனி வரை இணைக்க படாமல் உள்ள மழை நீர் வடிகால் இணைப்புகளை துரிதமாக ஒரு வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
உள் வட்ட சாலையில் கொளத்தூர் வீனஸ் நகர்பகுதியில் முடிக்கப்பட்டுள்ள வெள்ள நீர் வெளியேற்றும் மோட்டார் அறை பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். டெம்பிள் பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் மோட்டார் அறை பணியை பருவ மழைக்கு முன்னர் முடிக்க அறிவுறுத்தினார்.
கொளத்தூர் பகுதியில் ரெட்டேரியில் தணிகாச்சலம் கால்வாயுடன் இணைக்கும் வகையில் நடை பெற்று வரும் பெரிய மழை நீர் வடிகால் பணியினை ஆய்வு செய்தார். 15-ந்தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஆணையிட்டார்.
மேலும் பெரிய வடக்கத்திய சாலை கணபதி நகர் பகுதியில் மற்றும் உள்வட்ட சாலை சதாசிவம் நகர் பகுதிகளில் அமைக்க படவேண்டியுள்ள குறுக்கு கால்வாய் பணிகளை துரிதப்படுத்தி, 15-ந்தேதிக்குள் முடிக்க அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ,மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.