நாமக்கல்
நாமக்கல் முதலைப்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
|நாமக்கல் முதலைப்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் முதலைப்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
நாமக்கல் நகருக்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக முதலைப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் வசதி, வணிக வளாகம் உள்ளிட்டவை கொண்ட வரைபடம், அணுகு சாலை வரைபடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நாமக்கல் நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் 60 சதவீத மக்கள் நகர்ப்பகுதிகளில் வசிக்கின்றனர். தமிழக முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று கொரோனா பேரிடர் பணிகளை மேற்கொண்டபோதிலும், கடுமையான நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக நகர்ப்புறத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும் என்கிற அடிப்படையில் நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதன் மூலம் தினசரி சந்தைகள் மேம்பாட்டு பணி, மின் மயானம் அமைத்தல், மண் சாலைகளை தார் சாலைகளாக மேம்படுத்துதல், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து அலுவலர்களும் விரைந்து பணியாற்றிட வேண்டும்.
புதிய பஸ் நிலையம்
நாமக்கல் நகரத்திற்கு ரூ.37 கோடி மதிப்பில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம் ஆய்வு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தினை விரைந்து முடிக்க வேண்டுமென இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பஸ் நிலையம் அமைப்பதில் அணுகு சாலை மற்றும் சுற்றுவட்ட சாலை முக்கிய பணியாக உள்ளது. எனவே, சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு தேவையான இடத்தினை கையகப்படுத்துவதில் வருவாய் துறை அலுவலர்கள் விரைந்து செயல்படவேண்டும்.
அதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முன்மொழிவினை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் குப்பைகளை திறம்பட கையாண்டு சுகாதாரத்தை பேணி காத்திட வேண்டும். குப்பைகளை திறம்பட பிரித்து கையாள்வதற்காக முன்மாதிரியாக இந்தூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறையினை நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
6 மாதத்தில் தொடங்கும்
தொடர்ந்து நகராட்சி ஆணையாளர்களிடம் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- நாமக்கல்லில் புதிய பஸ்நிலையம் அமைக்க அறநிலையத்துறையிடம் இருந்து 13 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் 50 பஸ்கள் நிறுத்தும் வகையிலும், 54 கடைகள் வைக்கும் வகையிலும் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள பஸ் நிலையத்திற்கு சுற்றுவட்ட சாலையில் இருந்து அணுகுசாலை அமைக்க வேண்டும். சுற்றுவட்ட சாலை அமைக்க 23 கி.மீட்டர் நீளத்திற்கு நிலம் தேவைப்படுகிறது. இந்த பணியை பல்வேறு பகுதிகளாக பிரித்து மேற்கொள்ள இருக்கின்றனர். 3 பகுதிக்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இப்பணிகள் எல்லாம் முடிய 6 மாத காலம் ஆகும். பின்னர் பஸ் நிலைய பணிகள் தொடங்கப்படும். மீதமுள்ள நிலத்தை கையகப்படுத்த புதிதாக தாசில்தார் நியமிக்கப்பட்டு உள்ளார். நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கண்டிப்பு
முன்னதாக ஆய்வு கூட்டத்தில் முன்வரிசையில் அமர்ந்து இருந்த குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் செல்போனை பார்த்து கொண்டு இருந்தார். இதை கவனித்த அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு கூட்டம் நடைபெறும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என அவரை கண்டித்தார்.
இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா, நகராட்சி ஆணையாளர் சுதா, நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சங்கீதா பிரபு சங்கர் உள்பட நகராட்சி ஆணையாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.