< Back
மாநில செய்திகள்
பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் படுத்து ஆய்வு செய்த அமைச்சர் நாசர்
சென்னை
மாநில செய்திகள்

பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் படுத்து ஆய்வு செய்த அமைச்சர் நாசர்

தினத்தந்தி
|
27 Dec 2022 1:39 PM IST

பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதை அமைச்சர் நாசர் சாலையில் படுத்து ஆய்வு செய்தார்.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரை, திருமுல்லைவாயல் நாகம்மை நகரில் உள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்ேதக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருமுல்லைவாயலில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சி.டி.எச். சாலையில் திடீரென ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ள ராட்சத குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டிருந்த வால்வின் உட்பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இதையறிந்த பால் வளத்துறை அமைச்சர் நாசர், நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பாதாள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்யும்படி ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் அமைச்சர் நாசர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சற்றும் யோசிக்காமல் திடீரென பாதாள குடிநீர் குழாயில் ராட்சத வால்வு உடைந்த பகுதியை துல்லியமாக கண்டறியும் வகையில் சாலையிலேயே படுத்து ஆய்வு செய்தார். பின்னர் உடைந்த குடிநீர் குழாய் பகுதி விரைவில் சரி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், பணிக்குழு தலைவர் ஆசிம் ராஜா, என்ஜினீயர் ரவிச்சந்திரன், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மண்டல குழு தலைவர்கள் இருந்தனர்.

மேலும் செய்திகள்