< Back
மாநில செய்திகள்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  ரூ.95 லட்சம் செலவில் 2 பாலங்கள்- அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
மதுரை
மாநில செய்திகள்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் செலவில் 2 பாலங்கள்- அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
9 Oct 2023 6:39 AM IST

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் செலவில் 2 பாலங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.


வண்டியூர்

மதுரை மாநகராட்சி உத்தங்குடி டி.எம்.நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் 2 சிறு பாலங்கள் மற்றும் மதுரை வண்டியூர் ரிங்ரோடு அருகில் அமைந்துள்ள கல்மேடு பகுதியில் ரூ.65.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை ஆகியவை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லா மக்களும் எல்லாம் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஆட்சி செய்து வருகிறார். சாத்தமங்கலம் லேக் ஏரியா டி.எம். நகர் நலச்சங்கங்கள் மற்றும் குடியிருப்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. அந்த பகுதி மக்களின் போக்குவரத்துக்கு வசதியாக மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பங்கு தொகையுடன் சேர்த்து ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் 2 சிறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்மேடு

அதே போல் மதுரை வண்டியூர் ரிங்ரோடு பகுதியில் இருந்து கருப்பாயூரணி செல்வதற்கு ஏதுவாக கல்மேடு பகுதியில் சாலை அமைத்துதர பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் ரூ.65.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் வண்டியூர் ரிங்ரோடு வழியாக கருப்பாயூரணி செல்பவர்கள் எளிதாகவும், விரைவாகவும் செல்ல முடியும். இதன் மூலம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பூமிநாதன் எம்.எல்.ஏ., மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்