< Back
மாநில செய்திகள்
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
மதுரை
மாநில செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
11 Jun 2022 1:01 AM IST

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு நடத்தினார். இதுபோல், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மதுரை,

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு நடத்தினார். இதுபோல், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மதுரையில் ஆய்வு

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்வதற்காக விமானம் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தினார். மேலும், பயணிகள் வருகைக்கான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை கருவி உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு பணிகளை சரிவர கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

இதனை தொடர்ந்து அவர், அங்கிருந்து புறப்பட்டு காலை 8.30 மணி அளவில் வாடிப்பட்டி சென்றார். அய்யங்கோட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் திடீர் ஆய்வை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் திகைத்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தின் வருகை பதிவேடு, வார்டு அறைகள், மருந்து வாங்கும் இடங்களை பார்வையிட்டார்.

இதற்கிடையே, மருத்துவமனை அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது, டாக்டர் ரூபேஷ்குமார் பணியில் இல்லாததை அறிந்தார். உடனே அவரை செல்போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். இதையடுத்து பணி நேரத்தில் ஆஸ்பத்திரியில் இல்லாததால் டாக்டர் ரூபேஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர் அவர் ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்