சென்னை
ரூ.1¼ கோடியில் 20 அதிநவீன டயாலிசிஸ் எந்திரங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
|கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.1¼ கோடியில் நிறுவப்பட்டுள்ள 20 அதிநவீன டயாலிசிஸ் எந்திரங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
கிண்டி,
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.1¼ கோடியில் அதிநவீன டயாலிசிஸ் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
அதேபோன்று மூளை நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவில் ரூ.75 லட்சம் செலவில் அதிநவீன மூளை நரம்பு மின்காந்த சிகிச்சை எந்திரமும், மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் 4 ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து உறுப்புதானம் பெறுவது தொடர்பான கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சாந்திமலர், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி, சிறப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு பெறுப்பேற்பதற்கு முன்பு 13 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.
தற்போது மீதமுள்ள 27 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளிலும் உறுப்பு தானம் பெறுவதற்கு உரிமம் பெறப்பட்டுள்ளது.
உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் ஆயிரத்து 21 மருத்துவர்கள், 983 மருந்தாளுநர்கள், ஆயிரத்து 66 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.