சுகப்பிரசவம் வேண்டுமா? அரசு ஆஸ்பத்திரிக்கு வாருங்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு
|சுகப்பிரசவம் வேண்டுமா? அரசு ஆஸ்பத்திரிக்கு வாருங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
சென்னை அடையாறு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற 35-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து நிருபர்களிடம் தடுப்பூசி முகாம் குறித்து அவர் கூறியதாவது:-
மகளிரின் மகப்பேரை பொறுத்தவரை 'சிசேரியன்' முறையை தவிர்த்து, சுகப்பிரசவங்களுக்கு மட்டுமே வித்திடவேண்டும் என மகப்பேறு ஆஸ்பத்திரிகளுக்கு கடந்த ஓராண்டாக தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். மகளிருக்கு, கர்ப்பம் காலத்தில் நல்ல உணவு முறைகள், உடற்பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
தமிழகத்தில் தான் மகப்பேறு டாக்டர்களுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் அரசு ஆஸ்பத்திரிகளில் தான் 'சிசேரியனை' விட சுகப்பிரசவம் மூலம் அதிகளவு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் 'சிசேரியனாக' தான் இருந்திருக்கிறது. அவர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் 'சிசேரியன்' இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பது தான் அரசின் தொடர் விருப்பம்.
சுகப்பிரசவம் வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் கையில் தான் அது உள்ளது. நல்ல உணவுமுறைகளை உட்கொள்வது, நல்ல விழிப்புணர்வை பெறுவது, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அதிகமாக வருவது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் தான் அதற்கான விழிப்புணர்வு, யோகா பயிற்சிகள் போன்றவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அரசும் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என அவர் கூறினார்.