சிவகங்கை
மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பாராட்டு
|அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பாராட்டு தெரிவித்தார்.
திருப்புவனம்,
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த 17-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் மற்றும் திறமையான மாடுபிடி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் கலந்து கொண்டு 26 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தார். ஜல்லிக்கட்டு முடிந்து பின்பு நடைபெற்ற விழாவில் அவருக்கு முதல்-அமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட காரை அமைச்சர் மூர்த்தி பரிசாக வழங்கினார். பின்பு சொந்த ஊரான பூவந்திக்கு வந்த அபிசித்தருக்கு அதிர்வேட்டுக்கள், மேளதாளங்கள் இசைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அலுவலகத்திற்கு மாடுபிடி வீரர் அபிசித்தர் வரவழைக்கப்பட்டார். அங்கு மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சால்வை அணிவித்து வரவேற்று பாராட்டினார். பின்பு மாடுபிடி வீரருக்கு 1 லட்சத்து 1 ரூபாயை நிதி உதவியாக அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.