சென்னை: தியேட்டரில் படம் பார்க்க சென்ற அமைச்சர் குடும்பத்தினர் மீது தாக்குதல்
|தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செயல்பட்டு வருகிறார்.
சென்னை,
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவரது மகன் ரமேஷ் மற்றும் பேரன் நேற்று இரவு தி.நகரில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர்.
தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் விசில் அடித்து, அதிக சத்தம் எழுப்பி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். இதை அமைச்சரின் பேரன் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. எதிர்தரப்பு தாக்கியதில் அமைச்சரின் மகன் மற்றும் பேரனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.