< Back
மாநில செய்திகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிப்பு
மாநில செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிப்பு

தினத்தந்தி
|
20 July 2023 6:13 PM IST

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர்,

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார். கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் 27ம் தேதியும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்