தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவராக அமைச்சர் கயல்விழி நியமனம்..!
|தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவராக அமைச்சர் கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
திமுக அரசு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அமைச்சரவையில் முக்கிய மாற்றமாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தலைவராக நியமித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் துணைத் தலைவராக செ.கனிமொழி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, 14 புதிய அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் (53) தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.காம்., பிஎட்., படித்துள்ளார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தி.மு.க மகளிரணியில் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் கே.செல்வராஜ் பி.ஏ.பி.எல் படித்து வக்கீலாக உள்ளார். இவர்களுக்கு பட்டதாரியான எஸ்.திலீபன், வக்கீலுக்கு படித்த எஸ்.கே.உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர்.