< Back
மாநில செய்திகள்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

தினத்தந்தி
|
12 Jun 2022 2:25 PM IST

கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் புதிய புறநகர் பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் சி‌.எம்‌.டி.ஏ‌. அதிகாரிகளிடம் இன்னும் முடிவு பெறாமல் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து நடந்து முடிந்த கட்டுமான பணிகளை ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் புறநகர் பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும். இந்த பஸ்நிலையம் திறக்கப்பட்ட உடன் சென்னை புறநகர் மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் மேலும் செங்கல்பட்டில் ரூ.50 கோடி செலவில் 11 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ்நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்தும் ஆய்வு செய்தோம்.

இந்த புதிய பஸ்நிலையம் அமையும் இடமானது கோர்ட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் போன்ற பகுதிகளுக்கு இடையில் அமைய உள்ளது.

பஸ் நிலையத்துடன் இணைத்து பணிமனையும் அமைக்கப்பட உள்ளதால் செங்கல்பட்டு நகர்ப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். அதே போன்று மாமல்லபுரத்தில் ரூ.60 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் தேவையான நிதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலமாக வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்