திருவள்ளூர்
ரூ.90 லட்சத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் அமைச்சர் காந்தி வழங்கினார்
|மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் அமைச்சர் காந்தி வழங்கினார்
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கே.இ.என்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 1,847 மாணவ, மாணவிகளுக்கு ரூ.89.03 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,847 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 'தமிழ்நாட்டில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் நன்றாக படித்து உயர்கல்வியில் சேர்ந்து பட்டங்களை பெற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்.