< Back
மாநில செய்திகள்
தமிழகத்திற்கான வரி பகிர்வில் மத்திய அரசு ஓரவஞ்சனை - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

'தமிழகத்திற்கான வரி பகிர்வில் மத்திய அரசு ஓரவஞ்சனை' - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
12 Jun 2024 3:15 PM IST

நிதி பங்கீடு செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்திற்கான வரி பகிர்வில் மத்திய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ஜி.எஸ்.டி. வந்தது முதல் நிதி பங்கீடு செய்வதில் மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வரி செலுத்துவதில் 2-வது இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் உத்தர பிரதேசத்திற்கு 26,000 கோடி ரூபாயும், தமிழ்நாட்டிற்கு 5,600 கோடி ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலைதான் தற்போது இருக்கிறது. இருப்பினும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ள தமிழ்நாட்டு மக்கள், மத்திய அரசாங்கம் இப்படி வஞ்சிக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் பா.ஜ.க. ஆட்சியை அகற்றும் உணர்வில் 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளுக்காக 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்."

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்