துரைமுருகன் உடனான எனது நட்பு தொடரும்: நடிகர் ரஜினிகாந்த்
|துரைமுருகன் என்ன பேசினாலும் வருத்தம் இல்லை; அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரணமானது இல்லை என்றும், முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சர்வசாதாரணமாக இதனை செய்கிறார் எனவும் பேசினார். மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினிகாந்த் இவ்வாறு பேசியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த பேச்சு தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து இருந்த துரைமுருகன், " சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசி காலத்திலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்" என்று கூறினார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் கூறியதில் வருத்தம் இல்லை என்றார். இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறியதாவது:- அமைச்சர் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர்: அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும்" என்றார். மேலும்,தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.