நீர்வளத்துறை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
|நீர்வளத்துறையில் அனைத்து திட்டங்களையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கூடுதல் செயலாளர், சிறப்பு செயலாளர், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நீர்வளத்துறை தொடர்பான பணிகளின் தற்போதைய நிலை, தொய்வாக நடைபெறும் பணிகளின் நிலை, அவற்றுக்கான காரணம் மற்றும் தீர்வுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார். மேலும் நீர்வளத்துறையில் நடைபெறும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிப்பதற்கு புதிய திட்டங்களை தயார் செய்து, அதற்கான கருத்துருக்களை உடனடியாக சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.