< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழாவில் பங்கேற்கும் வி.ஐ.டி., அரசு ஆண்கள் பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

தினத்தந்தி
|
31 Jan 2023 10:33 PM IST

காட்பாடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடங்களை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

காட்பாடி

காட்பாடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடங்களை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகிறார். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொளளம் அவர் மாலையில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாணவர் விடுதி கட்டிடத்தையும் மற்றும் பியர்ல் ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.ஐ.டி.பல்கலைகழகம் ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன், துணை தலைவர் ஜி.வி.செல்வம், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., துணை மேயர் எம்.சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல குழு தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி கவுன்சிலர் கே.அன்பு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புதுப்பொலிவுடன் காட்பாடி

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு காட்பாடி புதுப்பொலிவு பெறுகிறது. விருதம்பட்டு முதல் காட்பாடி வரை உள்ள சாலை தடுப்புகளில் புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும் விருதம்பட்டில் இருந்து காட்பாடியில் வரை சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை மண் சாலை, தார் சாலையாக போடப்பட்டுள்ளது. அரசு ஆண்கள் பள்ளியில் கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு புது பொலிவு பெற்றுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

அங்குள்ள அரங்கத்தில் விழா மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேடை அமைக்கப்படும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் லெட்டர் கொண்டு சோதனை செய்தனர்.

காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேபோல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தை தூய்மைப்படுத்தி வண்ணம் பூசும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது. இதுதவிர கலெக்டர் அலுவலக வளாகம், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணி நடந்தது.

சுமார் 70 தூய்மை பணியாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்-அமைச்சர் செல்லும் பாதைகளில் தூய்மைப்பணி நடந்தது. இதேபோல காட்பாடி ரெயில் நிலையத்திலும் தூய்மை பணி நடந்தது.

அமைச்சர் ஆய்வு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வண்ணம் பூசும் பணி நடந்தது. இதனால் பள்ளி கட்டிடங்கள் புதுப்பொலிவு பெற்றது. மேலும் மரங்கிளைகள் அகற்றப்பட்டது. விழா மேடை அமைக்கும் பணிகள் நடந்தது. பள்ளி வளாகத்தில் மணல் கொட்டப்பட்டு ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடந்தது. விழா அரங்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழா மேடை உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதை அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

காட்பாடி முழுவதும் முதல் வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்