காஞ்சிபுரம்
வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
|வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள அடையாறு ஆற்றின் கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் வரதராஜபுரம், சோமங்கலம் பகுதிகளில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகள் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் கீழ்மட்ட கால்வாய் அமைக்கும் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் மற்றும் முல்லை நகர், ராயப்பா நகர், மணிமங்கலம் பாலம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி பொறியாளர் குஜராஜ், வரதராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி, மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.