தேனி
தமிழகத்தில் மேலும் 1,000 பள்ளி கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
|தமிழகத்தில் மேலும் 1,000 பள்ளி கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் மேலும் 1,000 பள்ளி கட்டிடங்கள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற தொகுதி வாரியாக பயணம் செய்து அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவர் திடீர் ஆய்வு செய்தார்.
சேதம் அடைந்த கட்டிடம்
லோயர்கேம்ப் பள்ளிக்கு வருகை தரும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை, சாரண, சாரணியர் இயக்கத்தின் செயல்பாடு, விளையாட்டில் சாதனை படைத்த அப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார். உத்தமபுரம் பள்ளியில் தமிழ் ஆசிரியர்களுக்கு நடந்த பணித்திறன் பயிற்சி வகுப்பு, ஆய்வகம், கணினி அறை ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது பள்ளிக்கட்டிடம் சேதம் அடைந்து இருந்ததை அவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கட்டிடத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கோட்டூர் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக அமைச்சர் பாராட்டினார். பள்ளியின் நூலகம், மைதானம் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். அல்லிநகரம் பள்ளியில் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். அதே வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும் அவர் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள வட்டார வளமையத்தில் நடந்த ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1,000 கட்டிடங்கள் திறப்பு
இந்த ஆய்வை தொடர்ந்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகளில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம். நேரடியாக பார்க்கும் போது பல இடங்களில் சிதிலம் அடைந்து இருக்கிறது. உடனடியாக அதற்கான நிதி ஒதுக்க வேண்டும் என்றோம். தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மரத்தடியில் அமர்ந்து படிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அந்தந்த பகுதியின் எம்.எல்.ஏ.க்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறோம்.
பள்ளி கட்டிடங்கள் அமைப்பதற்காக நபார்டில் இருந்தும் ரூ.813 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 1,000 பள்ளி கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்து இருக்கிறார். இந்த மாதத்தில் மேலும் 1,000 பள்ளி கட்டிடங்களை விரைவில் திறக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக எந்தெந்த கட்டிடங்கள் கட்டி திறக்கப்படாமல் இருக்கிறது என்று ஒரு பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.