தஞ்சை புத்தகத் திருவிழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைக்கிறார்
|தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். இதில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் இடம் பெறுகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார்.
இந்த புத்தகத் திருவிழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த புத்தகத்திருவிழா தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடக்கிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு நகைச்சுவை- சிந்தனை அரங்கம் நடக்கிறது.
- 15-ம் தேதி (இன்று) மாலை 6.30 மணிக்கு நடக்கும் நகைச்சுவை-சிந்தனை அரங்கத்தில் தொலைக்காட்சி புகழ் கோபிநாத் கலந்து கொண்டு வீடு வரை உறவு என்ற தலைப்பில் பேசுகிறார்.
- 16-ம் தேதி (நாளை) வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவதிலா அல்லது பெறுவதிலா என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது.
- 17-ந் தேதி நல்ல பொழுதையெல்லாம் என்ற தலைப்பில் சுகி.சிவமும், கெஞ்சலும், மிஞ்சலும் என்ற தலைப்பில் சண்முகவடிவேலும் பேசுகின்றனர்.
- 18-ந் தேதி மானுடம் வெல்லும் என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கமும், வாழ்க்கையை வாசிப்போம் என்ற தலைப்பில் அருள்பிரகாசும் பேசுகின்றனர்.
- 19-ந் தேதி புத்தகம் என்னும் போதிமரம் என்ற தலைப்பில் மணிகண்டனும், சிந்தனை செய் மனமே என்ற தலைப்பில் செந்தூரனும் பேசுகின்றனர்.
- 20-ந் தேதி அன்பே அறம் என்ற தலைப்பில் மோகனசுந்தரமும், பார்த்துக்கலாம் என்ற தலைப்பில் சுந்தர ஆவுடையப்பனும் பேசுகின்றனர்.
- 21-ந் தேதி ஒரு சொல் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானாவும், தெம்புக்கு படிங்க என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கமும் பேசுகின்றனர்.
- 22-ந் தேதி வரலாறு முக்கியம் என்ற தலைப்பில் பாரதி பாஸ்கரும், திருக்குறளில் மேலாண்மை என்ற தலைப்பில் ஜெயம்கொண்டானும் பேசுகின்றனர்.
- 23-ந் தேதி கல்வியே செல்வம் என்ற தலைப்பில் ஞானசம்பந்தமும், குறள் எடு, குறை விடு என்ற தலைப்பில் தாமோதரனும் பேசுகின்றனர்.
- 24-ந் தேதி சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது கனிந்த மனமே, நிறைந்த பணமே என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
- 25-ந் தேதி பேசும் புத்தகம் என்ற தலைப்பில் தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஸ் பேசுகின்றார்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் இந்த புத்தகத்திருவிழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களை சேர்ந்த புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. இந்த புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.