'மாப்பிளை சம்பா' அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
|புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த பொருட்களின் கண்காட்சி-விற்பனையை சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
சென்னை:
புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த பொருட்களின் கண்காட்சி-விற்பனை சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 43 பெருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறது. இதில் 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பெருமைபடவேண்டும். தஞ்சாவூர் நாதஸ்வரம், நாச்சியார் கோவில் விளக்கு, ஓவியம், தலையாட்டி பொம்மை உள்பட 10 பொருட்களுக்கு இந்த புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறது.
நாம் தயாரித்த பொருட்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்த புவிசார் குறியீட்டை பெறுகிறோம். புவிசார் குறியீடு தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருந்தாலும், நாம் குறைவான அளவிலேயே விண்ணப்பித்து இருக்கிறோம்.
முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, இன்னும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம். நம்முடைய பண்பாட்டை, கலாசாரத்தை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
''மாப்பிள்ளை சம்பா'' அரிசிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதனை பெறுவதற்கான முயற்சியை செய்வோம்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோம். புத்தக கண்காட்சியிலும் தனி அரங்கு அமைத்து இதனை இடம்பெற செய்வோம் என கூறினார்.