கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில்பட்டாசு குடோன் விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம்அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
|கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் விபத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
அமைச்சர் ஆறுதல்
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நேற்று முன்தினம் பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் 9 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக உணவு துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து படுகாயம் அடைந்த 11 பேருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளையும், லேசான காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.12 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது கலெக்டர் கே.எம்.சரயு, செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், ஒய்.பிரகாஷ், போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நிவாரண பணிகள்
கிருஷ்ணகிரி நகராட்சி பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நேற்று முன்தினம் காலை எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 13 பேருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.
இந்த துயர செய்தியை அறிந்த முதல்-அமைச்சர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த ஆணையிட்டார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் தெரிவிக்க என்னை நேரில் அனுப்பி வைத்தார்.
சிலிண்டர் வெடித்ததே காரணம்
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த காரணங்களை தர்மபுரி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வழங்கி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் குறித்தும், விற்பனை செய்யப்படும் இடம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள விவரங்கள் சேகரிக்கப்பட்டு பட்டாசு கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை வழங்கி இனிவரும் காலத்தில் பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, தாசில்தார் சம்பத் உள்பட பலர் உடன் இருந்தனர்.