திருப்பூர்
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாது
|திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதேமில்லத் நகரில் அமைக்கப்பட இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று, திருப்பூரில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார்.
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட காயிதேமில்லத் நகர் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் குடியிருப்புகள், பள்ளிவாசல் உள்ளதால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். தொடர்ந்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடர்ந்ததால் 45-வது வார்டு முழுவதும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதன் பிறகு கலெக்டர், எம்.எல்.ஏ., மேயர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட இடத்தில் கழிவுநீர்சுத்திகரிப்பு மையம் அமைக்கும் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக உறுதி அளித்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
இந்த நிலையில் நேற்று மதியம் திருப்பூர் காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க தேர்வான இடத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வந்து ஆய்வு செய்தார். அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டு இருந்தனர். அவர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதால் எந்தவித பிரச்சினையும், சுகாதார சீர்கேடும் ஏற்படாது என்று அமைச்சர் விளக்கி கூறினார். ஆனால் இந்த திட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
வேறு இடத்துக்கு மாற்றம்
பின்னர் அமைச்சர்கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாநகரில் 3 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காயிதே மில்லத் நகரில் ஒரு கழிவுநீர்சுத்திகரிப்பு மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த இடத்தில் அமைக்காமல் வேறு இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
100 எம்.எல்.டி. அளவு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அதைவிட அதிக எம்.எல்.டி. அளவு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் அளவுக்கு பெரிய இடத்தை தேர்வு செய்து அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும். முஸ்லிம் மக்கள் கபர்ஸ்தானுக்கு இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முறைப்படி சட்டத்தில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைய இருந்த இடம்நீர்நிலை புறம்போக்கு. அங்கு கபர்ஸ்தான் அமைக்க அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போதுநகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன், கலெக்டர் கிறிஸ்துராஜ், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், சுப்பராயன் எம்.பி., துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கவுன்சிலர்கள், தி.மு.க.வினர், காயிதேமில்லத்நகர் பகுதியை சேர்ந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மைய எதிர்ப்பு போராட்டக்குழு கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
பேச்சை நிறுத்திய அமைச்சர்
காயிதே மில்லத் நகர் முஸ்லிம் மக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேச்சுவார்த்தை நடத்தியபோது அருகில் உள்ள பள்ளிவாசலில் மதியம் 12.45 மணிக்கு பாங்கு ஒலித்தது. உடனடியாக தனது பேச்சை நிறுத்திய அமைச்சர் அமைதியானார். பின்னர் அனைவரும் அமைதியாக நின்றனர். பள்ளிவாசலில் பாங்கு முடிந்த பிறகே அமைச்சர் கே.என். நேரு தனது பேச்சை தொடங்கினார்.