< Back
மாநில செய்திகள்
2-ம் கட்ட பணிகளுக்கு தேவையான சுரங்கம் தோண்டும் எந்திரம் சீனாவில் இருந்து சென்னைக்கு வருகை - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
சென்னை
மாநில செய்திகள்

2-ம் கட்ட பணிகளுக்கு தேவையான சுரங்கம் தோண்டும் எந்திரம் சீனாவில் இருந்து சென்னைக்கு வருகை - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

தினத்தந்தி
|
3 July 2022 10:44 AM IST

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சீனாவில் இருந்து சுரங்கம் தோண்டும் எந்திரம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டத்தில் உள்ள 3-வது வழித்தடத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை முதல் தரமணி வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை வழித்தடம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் கடந்த மே மாதம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வேணுகோபால் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் எந்திரத்தை செலுத்தும் பகுதியில் இருந்து கெல்லீஸ் மெட்ரோ ரெயில் நிலையம் வரை 9 கிலோ மீட்டர் நீளத்திலான இரட்டை சுரங்கப்பாதைகளின் கட்டுமானம் நடக்கவிருக்கிறது. குறிப்பாக, மாதவரம் பால் பண்ணை, மாதவரம் நெடுஞ்சாலை, அயனாவரம் மற்றும் புரசைவாக்கம் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் நிலத்தடி நிலை கட்டுமானம் மற்றும் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளுக்கான கட்டுமானங்களும் நடக்கவிருக்கிறது.

இந்த, மெட்ரோ நிலையங்களில் சுரங்கம் தோண்டும் எந்திரத்தை செலுத்துதல் மற்றும் மீட்டெடுத்தலுக்கான கட்டுமானங்கள் ஆகியவை முன்னேற்றத்தில் உள்ளன. 2-ம் கட்டத்திற்கு தேவையான எஸ்.96 மற்றும் எஸ்.97 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் சீனாவில் உள்ள டெராடெக் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சீனாவில் இருந்து வருகை

இந்த சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் 6.6 மீட்டர் விட்டத்தை கொண்டு நில அழுத்த சமன்பாடு எந்திரங்களாகும். இவை 2-ம் கட்ட திட்ட பகுதியில் உள்ள மாறுபட்ட நில அமைப்பிற்கு பொருத்தமாக உள்ளது. முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மாதவரம் பால் பண்ணை நிலையத்திலிருந்து தபால்பெட்டி நிலையத்தை நோக்கி சுரங்கம் தோண்டும் பணிகளை வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளது. 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் மாதவரம் நெடுஞ்சாலையிலிருந்து தபால் பெட்டி நிலையத்தை நோக்கி சுரங்கம் தோண்டும் பணிகளை நவம்பர் மாதம் தொடங்குகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அவற்றில் சில இந்தியாவிலும், எஞ்சியவை சீனாவிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் சீனாவில் இருந்து சென்னை மாதவரம் பால் பண்ணைக்கு வந்து சேர்ந்தது. இந்த சுரங்கம் தோண்டும் எந்திரத்தை மாதவரம் பால் பண்ணையில் இருந்து செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அந்த எந்திரம் அக்டோபர் மாதம் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்