< Back
மாநில செய்திகள்
3 மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..!
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..!

தினத்தந்தி
|
19 May 2023 4:38 PM IST

தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1996-2001ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தொலைநோக்கு பார்வையுடன் சென்னையில் டைடல் பூங்காவை நிறுவினார். இது நம் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.

பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி, சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி' என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணத்திற்கேற்ப, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் ஏழு மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

மினி டைடல் பூங்கா தூத்துக்குடி:-

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டடான்-II பகுதியில் 4.16 ஏக்கர் நிலப் பரப்பளவில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63,100 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 4 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.

மினி டைடல் பூங்கா தஞ்சாவூர்:-

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் 3.40 ஏக்கர் நிலப்பரப்பளவில், 30 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 55,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.

மினி டைடல் பூங்கா சேலம்:-

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆணைகெளண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடங்கிய நிலப்பரப்பளவில், 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 55,000 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.

இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும், இவை, அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியடையவும், ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்