மதுரை
கனிமவள முறைகேடு: குவாரி உரிமையாளர்களுக்கு ரூ.2¾ கோடி அபராதம்- ஐகோர்ட்டு உத்தரவு
|கனிமவள முறைகேட்டில் குவாரி உரிமையாளர்களுக்கு ரூ.2¾ கோடி அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரையை சேர்ந்த இளவரசன் ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை வாடிப்பட்டி தாலுகா பகுதியில் செயல்படும் சில குவாரிகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளையடிப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட குவாரிகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்ததில், மதுரை மேலூரை சேர்ந்த 2 நபர்கள் நடத்தும் குவாரியில் பல்வேறு விதிமுறைகள் நடந்திருப்பதும், இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த குவாரிகளுக்கு ரூ.2 கோடியே 77 லட்சத்து 53 ஆயிரத்து 400 அபராதமாக விதித்து கடந்த பிப்ரவரி மாதம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். இந்த உத்தரவு தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்களிடம் இருந்து அபராதத்தொகையும் வசூலிக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்தால், பிற குவாரிகளிலும் விதிமீறல்கள் நடக்கும் நிலை உள்ளது. எனவே, அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குவாரி உரிமையாளர்கள், அபராதம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மேல் முறையீடு செய்துள்ளனர். அந்த மனு நிலுவையில் உள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில், மேல்முறையீட்டு மனுவை மதுரை கலெக்டர் 12 வாரத்திற்குள் முடிவு செய்து அபராத தொகையை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.