< Back
மாநில செய்திகள்
கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
13 Jun 2022 7:50 PM GMT

கோடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் உடனுறை கோடீஸ்வரர் சுவாமி கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கடந்த 60 ஆண்டுகளாக சீரமைக்கப்பட்டாமல், சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து ஊர் நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆதரவோடு கோவிலை சீரமைக்கும் பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றது. இதில் சிவன் கோவில் மண்டபம், கருவறை மற்றும் கருவறை கோவில் கோபுரம் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலும் புதுப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 10-ந் தேதி தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கியது. பின்னர் 3 கால பூஜையுடன் வேள்வி வழிபாடு நடைபெற்றது. இந்த பூஜையின் முடிவில் நேற்று காலை செந்தமிழ் ஆகம அந்தணர்களின் வேதமந்திரங்கள் தமிழில் முழங்க மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் செந்துறை பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து, சிவபெருமான் மற்றும் பெரியநாயகி அம்மனை வழிபட்டனர்.

பின்னர் நாகமங்கலம் சிவனடியார் தமிழ் வேத பாடசாலையை சேர்ந்த செந்தமிழ் ஆகம அந்தணர்கள் சிவலிங்கத்திற்கு கொன்றை மலர் உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மூல மூர்த்திகளுக்கு அபிேஷக வழிபாடு செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைத்தனர். கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாணமும், சிவபெருமான் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுகளத்தூர் கிராம நாட்டாண்மைக்காரர்கள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்