திருச்சி
மொபட் மீது லாரி மோதி பால் வியாபாரி பலி
|மொபட் மீது லாரி மோதி பால் வியாபாரி உயிரிழந்தார்.
தா.பேட்டை:
பால் வியாபாரி
மண்ணச்சநல்லூர் தாலுகா திருப்பைஞ்சீலி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 60). பால் வியாபாரி. இவரது மனைவி பிரேமா(54). நேற்று தா.பேட்டை அருகே ஜடமங்கலம் கிராமத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக கணேசன், பிரேமாவுடன் ஒரு மொபட்டில் திருப்பைஞ்சீலியில் இருந்து வந்துள்ளார்.
அப்போது முசிறி-துறையூர் மெயின் சாலையில் வாளவந்தி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரி மொபட் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேமா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரேமாவை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் பரந்தாமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மனைவி கண்ணெதிரே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.