பால் கொள்முதல் விலை விவகாரம் - தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
|பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை,
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
இந்தநிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
* ஈரோடு, ராயபாளையத்தில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை ஊற்றியும் போராட்டம் நடத்தினர்.
* ஈரோடு அடுத்த நசியனூரில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கறவை மாடுகளுடன் வந்து சாலையில் பாலைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* மதுரை உசிலம்பட்டியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பால்கொள்முதல் செய்ய வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.