மிக்ஜம் புயல்: போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
|வெள்ள நீர் மற்றும் கழிவு நீர் வடிந்துள்ள பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னையில் மிக்ஜம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், மாநகராட்சி ஊழியர்களும் இரவு - பகல் பாராமல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களிலிருந்து 5000-க்கும் மேற்பட்டோரை வரவழைக்க அரசு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதிப்பின் தீவிரத்தை குறைத்துள்ளது. அரசு ஊழியர்களின் பணிகளும் மெச்சத்தக்க அளவில் உள்ளன.
இருப்பினும், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பள்ளிக்கரணை, ஹஸ்தினாபுரம், முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், ஆலந்தூரில் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும், வடசென்னை பகுதியில் பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, மகாகவி பாரதி நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், மயிலாப்பூரில் 121-வது வட்டம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும், தொலைபேசி தொடர்பிழந்து தவித்து வருகின்றனர்.
தாழ்வான இடங்களில் குடியிருக்கும் மக்களின் வீட்டிற்குள் மழைநீரும், கழிவு நீரும் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளிலும், மேல் தளங்களில் தங்கி கீழே வர முடியாமல் உள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்கள், உடமைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், வேன், ஆட்டோ போன்றவைகளும் நீரில் மூழ்கியுள்ளன. குடிநீர், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டுமெனவும், பால், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கிடவும், மழைநீர் - கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், தொலைபேசி தொடர்பு இல்லாமல் வெள்ளநீர் சூழ்ந்துள்ள இடங்களை கண்டறிந்து வான் வழியாக உணவுப் பொட்டலங்கள், குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், படகு உள்ளிட்ட மீட்பு பணிகளை அதிகரிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
வெள்ள நீர் மற்றும் கழிவு நீர் வடிந்துள்ள பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் சிபிஐ (எம்) கேட்டுக் கொள்கிறது. மேலும், புயல் பாதிப்பால் இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 கோடி தமிழகத்திற்கு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரியுள்ளதை உடனடியாக ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.