< Back
மாநில செய்திகள்
கோயம்பேட்டில் நள்ளிரவில்: ரூ.55 லட்சத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 4 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் நள்ளிரவில்: ரூ.55 லட்சத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 4 பேர் கைது

தினத்தந்தி
|
12 Jun 2022 8:55 AM IST

சென்னை கோயம்பேட்டில் நள்ளிரவில் ரூ.55 லட்சத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி, சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சாலமன் (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பருடன் கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.

அப்போது அதே ஓட்டலில் இருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்த 4 பேர் திடீரென சாலமனை பார்த்ததும், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை தாங்கள் வந்த காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாலமனின் நண்பர், கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட சாலமனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடத்தப்பட்ட சாலமனின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், மதுரவாயலில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் நேற்று அதிகாலையில் அங்கு சென்று கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட சாலமனை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் சாலமனை கடத்தி்ய அண்ணாநகரை சேர்ந்த கண்ணன் (40), விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ் (52), சரவணன் (32), நாராயணமூர்த்தி (36) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக முதலீடு செய்ய ரூ.55 லட்சத்தை சாலமனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சாலமன் தலைமறைவாகிவிட்டார்.

இந்தநிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சம்பவத்தன்று கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஓட்டலில் சாலமனை பார்த்த கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் சாலமனை காரில் கடத்திச்சென்றனர். பின்னர் மதுரவாயலில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து, ரூ.55 லட்சத்தை தரும்படி கேட்டு உருட்டுக்கட்டையாலும், கையாலும் சாலமனை சரமாரியாக தாக்கியதும் தெரிந்தது.

கடத்தல் கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த சாலமன், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான 4 பேரிடமும் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் சாலமனை போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்