திருவள்ளூர்
நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம்: வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை
|நள்ளிரவில் வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொன்னேரி அருகே நெடும்வரம்பாக்கம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் விஜயன் (வயது 70). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (63). நேற்று முன்தினம் இரவில் தம்பதியினர் தூங்க சென்றனர். இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் தூங்கிக்கொண்டிருந்த மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த தங்க நகைகளை எடுக்க சொல்லி மிரட்டினர். சத்தம் கேட்டு விஜயன் எழுந்ததால் அருகே இருந்த கட்டையால் அவரை தாக்கி பீரோவில் இருந்த 6¼ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வயதான தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.