தேனி
தக்காளிகளை மொத்தமாக வாங்கி சென்ற இடைத்தரகர்கள்
|கம்பம் உழவர்சந்தையில் தக்காளிகளை இடைத்தரகர்கள் மூலம் சிலர் மொத்தமாக வாங்கி சென்றனர்.
கம்பத்தில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரர்கள் இன்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கேரளாவை சேர்ந்த மக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த உழவர்சந்தையில் மலை காய்கறிகள் உட்பட்ட அனைத்து வகை காய்கறிகள், கீரை வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாள்தோறும் காய்கறிகள் விலை பட்டியல் டிஜிட்டல் தகவல் பலகையிலும், அந்தந்த கடைகளில் உள்ள விலைபட்டியல் பலகையில் காய்கறிகளின் தரத்திற்கு ஏற்றவாறும், தமிழகத்தின் பல்வேறு மார்க்கெட் விலையை வைத்து விலையை நிர்ணயம் செய்து உழவர்சந்தை அதிகாரிகள் அறிவிப்பார்கள். இந்நிலையில் உழவர்சந்தையில் கடை வைத்திருக்கும் சிலர் குறிப்பிட்ட காய்கறிகளை உழவர் சந்தையில் விற்பனை செய்யாமல் உழவர்சந்தைக்கு வெளியே கூடுதல் விலைக்கு காய்கறி விற்பனை செய்யவதாக புகார் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை உழவர்சந்தைக்கு 6 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கிலோ ரூ.25 விலை நிர்ணயிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட தக்காளிகளை மொத்தமாக இடைத்தரகர்கள் மூலம் சிலர் எடுத்து சென்றனர். இதையடுத்து உழவர் சந்தையில் தக்காளி கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர் உழவர் சந்தை வெளியே 1 கிலோ தக்காளி ரூ.40-க்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கி சென்றனர். உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி வெளிமார்க்கெட்டில் கூடுதல் விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.