மிக்ஜம் புயல் எதிரொலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் இந்த மிக்ஜம் புயல் மேலும் தீவிரம் அடைகிறது. இதன் காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் சமயத்தில் கடுமையான வானிலை நிலவக்கூடும் என்பதை குறிக்கும் வகையில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.