செங்கல்பட்டு
திருப்போரூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு: அதிமுகவினர் சாலை மறியல்
|திருப்போரூரில் எம்.ஜி.ஆர்.சிலை மீது காவி துண்டு அணிவித்து அவமதித்து விட்டதாக கூறி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவி துண்டு அணிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை அமைந்துள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவித்தும் கைவிரலில், காவி நிற துணியை கட்டியிருப்பதை பார்த்து அ.தி.மு.க.வினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு அ.தி.மு.க.வினர் கூட தொடங்கினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் போலீசார் அ.தி.மு.க.வினரை சமாதானம் செய்ய முயன்றனர்.
சாலை மறியல்
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் கூடிய அ.தி.மு.க.வினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு அணிவித்து அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரச பேச்சுவார்தையை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலையின் மீது இருந்த காவி துணியை போலீசார் அப்புறப்படுத்தினர்.
போலீசில் புகார்
இது குறித்து திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகார் அளித்தார். மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் திருப்போரூர் போலீசார் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே ஏற்பட்ட பிரிவினை பெரும் விவாதமாக மாறிவரும் நிலையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து கையில் காவி துணி கட்டி இருப்பது அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து முன்னணி அமைப்பினர் யாரேனும் இது போன்ற செயலில் ஈடுபட்டார்களா? அல்லது பா.ஜ.க.வினர் இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகம் அ.தி.மு.க.வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.