< Back
மாநில செய்திகள்
காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதா? ஜெயக்குமார் கண்டனம்
மாநில செய்திகள்

காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதா? ஜெயக்குமார் கண்டனம்

தினத்தந்தி
|
31 Aug 2023 4:16 AM IST

காலை உணவு திட்டத்துக்காக எம்.ஜி.ஆர். புகைப்படத்தை மறைப்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சந்தித்தார்.

அப்போது, சென்னை மாநகராட்சி பகுதிகளில் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்ட பலகைகளை அகற்றிவிட்டு காலை உணவு திட்ட பலகைகள் வைப்பதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தபோது அதை ஐ.நா.சபையே பாராட்டியது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கேலி பேசினார்.

அப்போது பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை செயல்படுத்துவேன் எனக்கூறி இந்த திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்.

குழந்தைகளின் பசியை போக்கும் இந்த மகத்தான திட்டத்தை மழுங்கடிக்கக்கூடிய வகையில் தி.மு.க. அரசு காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அக்சயா அமைப்பின் மூலம் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

காலை உணவு திட்டத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதே நாங்கள்தான். இந்தநிலையில், சென்னையில் 358 மையங்களில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் என்ற பெயர் பலகையை மறைத்துவிட்டு காலை சிற்றுண்டி திட்டம் என்று எழுதுகிறார்கள். இது ஒரு வக்கிரமான போக்கு.

எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை மறைப்பது சட்டவிரோதம். மீண்டும் அந்த புகைப்படத்தை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே நேரடியாக சென்று வைப்போம்.

எம்.ஜி.ஆர். பக்தர்களின் கோபத்திற்கு முதல்-அமைச்சர் ஆளாக வேண்டாம். கடந்த 2 ஆண்டுகளில் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களையே பெயர் மாற்றம் செய்து முதல்-அமைச்சர் திறந்துவைத்து கொண்டிருக்கிறார்.

அண்ணா நகரில், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனை தி.மு.க. கவுன்சிலரின் கைத்தடிகளே அராஜகம் செய்ததை பார்க்க முடிந்தது. ஐ.ஏ.எஸ்., போலீஸ் துறை என யாருக்குமே மதிப்பு இல்லை. இந்த ஆட்சியில் போலீசாரே அடிவாங்கும் அளவிற்கு இன்றைய நிலை உள்ளது.

சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று ஏண்டா காக்கிசட்டை போட்டோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தவர்கள் தி.மு.க.வினர்தான். எனவே, தி.மு.க.வினருக்கும் கோடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக தான் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால், வழியில் பயமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்